ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (12:42 IST)

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே  நேற்று ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்தது. புதுச்சேரியில் நேற்று நடந்த கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸ் தன்னுடைய மகள் வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன் என்பவரை பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக நியமித்தார்.

அதற்கு மேடையிலேயே எதிர்ப்பைத் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “அவர் கட்சியில் சேர்ந்தே நான்கு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பா? அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? அனுபவம் உள்ள யாரையாவது நியமியுங்கள்” எனக் கூறினார்.

அதற்கு ராமதாஸ் “"முகுந்தன் தான் பாமக இளைஞரணி தலைவர். இது நான் உருவாக்கியக் கட்சி. நான் சொல்வதுதான் நடக்கும். விருப்பமில்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள்" எனக் கூற கூட்டம் பதற்றமடைந்தது. அதன் பின்னர் இருவரையும் சமாதானப்படுத்த பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது முகுந்தன் கட்சியின் உறுப்பினர் என்பதைத் தவிர்த்து அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.