சிலிண்டர் விலை உயர்வு; தமிழக அரசு மானியம் தர வேண்டும்! – ராமதாஸ் கோரிக்கை!
நாட்டில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிக்க வேண்டுமென ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளது. சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து ரூ.875.50க்கு விற்பனையாகிறது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850.50 ஆக இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “வீட்டுப்பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து ரூ.875 ஆக உயர்த்தப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்!” என்று கூறியுள்ளார்.
மேலும் “சமையல் எரிவாயு விலையை குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்; தமிழக அரசும் அதன் பங்குக்கு ரூ.100 மானியம் வழங்கி சமையல் எரிவாயு விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்!” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.