திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ் கியான்
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (14:58 IST)

பஞ்சமி நிலம் விவகாரம் : ராமதாஸ் புளுகுகிறார்... ஸ்டாலின் பதில் டுவீட்... அரசியல் நாடகமா?

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார் என்று திமுக தலைவர்முக ஸ்டாலின், பாமக நிறுவனர்  ராமதாஸுக்கு சாவால் விட்டுள்ளார்.
தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.  இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் கொடுத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளில் குடும்பம் குடும்பமாக பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். 
 
எல்லோரும் இப்படத்தை பார்த்துவரும் நிலையில்,  நேற்று முந்தினம் இரவு, தூத்துக்குடியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் கூறியதாவது:
 
அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்திருந்தார்.
 
 
இந்நிலையில் ஸ்டாலினின் இந்த டுவிட்டுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு டுவிட் பதிவிட்டிருந்தார்.
 
அதில், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என தெரிவித்தார்.
 
இதற்குப் பதிலடியாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
’மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது  “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! 
 
அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட  பட்டா- மனை! என்று பதிவிட்டுள்ளார்.’
 
மேலும், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத்தயார் என்று தெரிவித்துள்ளார். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தேர்தல் காலத்தில் திமுக கூட்டணியில் பாமக இருந்தபோது, மருத்துவர் ராமதாஸ் இப்போதுள்ள குற்றச்சாட்டை முன்வைத்தாரா? என்ற கேள்வி அரசியல் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

ஒருவேளை, அப்போது ராமதாஸ் அன்றைய திமுகவிடம் இந்த பிரச்சனைகளை, பஞ்சமி நிலம் விவகாரத்தை எழுப்பியிருந்தால் அவரது மகன் அன்புமணிக்கு பாமக சார்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் போயிருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது, அரசியல் ஆதாயத்திற்காக ஒருகட்சியில் சேர்ந்து பதவிபெறுவதும், அக்கட்சியை
விட்டு வெளியேறி கூட்டணியை முறிந்த பிறகு அதேகட்சியை குறைகூறுவதுமே அரசியல் கட்சித்தலைவர்களின் வாடிக்கையாகி விட்டது எனவும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.