வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (14:05 IST)

21 வன்னியர்கள் சாவுக்கு திமுகதான் காரணம் – தேர்தல் பிரச்சாரத்தில் ராமதாஸ் பேச்சு !

இட ஒதுக்கீடுப் போராட்டத்தில் 21 வன்னியர்கள் உயிரிழந்ததற்கு திமுகதான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியுள்ளது. வன்னியர்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதால் அவர்களுக்கு யார் அதிக நன்மை செய்தது என்பது தொடர்பாக திமுகவுக்கும் பாமவுக்கும் இடையில் வார்த்தைப் போர் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கும் ஆதரவாக ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ’21 வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது இறந்ததற்கு திமுகதான் காரணம். போராட்டம் நடந்த அன்றுதான் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. நான் 6 மாதங்களுக்கு முன்பே இடஒதுக்கீடு போராட்டம் குறித்து கலைஞருக்கு கடிதம் எழுதினேன். சாலை மறியல் போராட்டத்தின் போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தியா வந்ததும் என்னை அழைத்தார். 13 சதவிகித இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவணத்தில் எழுதிவைத்தார். ஆனால் அது நடந்த ஒரு மாத காலத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.’ எனத் தெரிவித்தார்.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு திமுக ஆட்சிக் காலத்தில்தான் நிறைவேற்றப்பட்டது என்பதால் வன்னியரகள் வாக்கு திமுகவுக்கு செல்ல வாய்ப்புண்டு. அதைத் தடுக்கும் விதமாக எம்.ஜி.ஆரே இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்தார் என ராமதாஸ் பேசியுள்ளார்.