1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 27 மே 2021 (14:11 IST)

தமிழகத்தில் 10% கூட தடுப்பூசி போடல: ராமதாஸ் வருத்தம்!

தமிழ்நாட்டில் இன்னும் 10 விழுக்காட்டினருக்குக் கூட தடுப்பூசி போடப்படாதது வருத்தம் அளிக்கிறது என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலை உருவாகாமல் தடுக்கவும் பொதுமக்களில் பெரும்பான்மையினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் 10 விழுக்காட்டினருக்குக் கூட தடுப்பூசி போடப்படாதது வருத்தம் அளிக்கிறது.
 
இந்தியா முழுவதும் நேற்று வரை 19.83 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் மராட்டியத்தில் மட்டும் 2.13 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அடுத்தபடியாக உத்தரபிரதேசத்தில் 1.70 கோடி, இராஜஸ்தானில் 1.63 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அவற்றில் பாதிக்கும் குறைவாக 78.87 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இது தமிழக மக்கள்தொகையில் 10 விழுக்காட்டுக்கும் குறைவு. இதே வேகத்தில் தடுப்பூசி போடப்பட்டால், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடி பேருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க குறைந்தது 4 ஆண்டுகளுக்கு மேலாகி விடும்.
 
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு மிகக்குறைந்த அளவில் தடுப்பூசி ஒதுக்கீடு செய்தது, 18 வயது நிறைவடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மாநில அரசு விரைவுபடுத்தாதது, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தமிழக மக்கள் தயங்குவது ஆகியவையே அந்த 3 காரணங்களாகும்.
 
இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டுக்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளை மாநில அரசுகள் எவ்வளவு வேகத்தில் மக்களுக்கு செலுத்துகின்றன; மாநில அரசுகள் தடுப்பூசிகளை எவ்வளவு குறைவாக வீணடிக்கின்றன; ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வளவு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் தான் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. 
 
ஆனால், இந்த அடிப்படையிலும் கூட தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் தடுப்பூசி இயக்கம் தொடங்கப் பட்ட போது, மேற்கண்ட 3 காரணிகளிலும் தமிழகம் பின்தங்கியிருந்தது உண்மை. ஆனால், இப்போது நிலைமை மாறி விட்ட பிறகும், தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்கப்படாதது நியாயமல்ல. தடுப்பூசி ஒதுக்கீடு தொடங்கிய போது தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது; ஆனால், இப்போது இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 
 
அதேபோல், தடுப்பூசிகளை வீணடிப்பதில் முதலிடத்தில் இருந்த தமிழகம், இப்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசிகளை போடும் வேகமும் அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டுக்கான தடுப்பூசி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டியதும் மிகவும் அவசியமானது ஆகும்.
 
இவை அனைத்தையும் விட மிகவும் முக்கியமானது ஊரக மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ஆகும். நகர்ப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள போட்டி நிலவும் சூழலில் கிராமப்பகுதிகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 15.50% வீணாகிறது என்பதும், தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது. 
 
கிராமப்புற மக்களுக்கு செலுத்துவதற்காக கொண்டு செல்லப்படும் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்துவதற்கு தேவையான மக்கள் கிராமப்புறங்களில் முன்வராதது தான் இதற்குக் காரணமாகும். கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையில் கிராமப்புற மக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதற்கு காரணமும் அம்மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது தான்.
 
தடுப்பூசி குறித்து பரப்பப்படும் அடிப்படை ஆதாரமற்ற பொய்கள், அச்சமூட்டும் தகவல்கள் போன்றவை கிராமப்புற மக்களிடையே ஏற்படுத்தியுள்ள அச்சம் தான் அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராததற்கு காரணம் ஆகும். அந்த அச்சத்தைப் போக்கி தடுப்பூசியின் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் தான் நிலைமையை மாற்ற முடியும். அடுத்த சில மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை பரவக்கூடும் என்ற நிலையில், அதைத் தடுக்க கிராமப்புற மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகும். 
 
எனவே, கிராம நிர்வாக அலுவலர்களின் ஏற்பாட்டில், கொரோனா தடுப்பூசிகளின் நன்மை குறித்து தண்டோரா போடவும், அதன்மூலம் அம்மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், தடுப்பூசி போட்டுக்கொள்வதை கட்டாயமாக்கவும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் தமிழக அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று அறிவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.