திருவண்ணாமலை வாக்காளர்களிடம் வாக்கு கேட்ட மதுரை வேட்பாளர்.. தேர்தல் காமெடி..!
மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம சீனிவாசன் அழகர் கோவிலில் திடீரென ஒரு வேனில் ஏறி வாக்கு கேட்க அந்த வேனில் இருந்தவர்கள் நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து சுற்றுலா வந்திருக்கிறோம், எங்களுக்கு திருவண்ணாமலையில் தான் ஓட்டு இருக்கிறது என்று கூற உடனே அவர் சமாளித்து திருவண்ணாமலையில் எங்கள் வேட்பாளர் அசுவத்தாமன் போட்டியிடுகிறார், அவருக்கு வாக்களியுங்கள் என்று கூறிவிட்டு அசடு வழி வேனில் இருந்து இறங்கிய சம்பவம் தேர்தல் காமெடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து பாஜக சார்பில் ராம சீனிவாசன், அதிமுக சார்பில் சரவணன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்யாதேவி போட்டியிடுகின்றனர்.
கடந்த சில நாட்களாக பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில் நேற்று அவர் அழகர் கோவில் அருகே வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகளிடம் வாக்கு கேட்க போது எங்களுக்கு மதுரையில் வாக்கு இல்லை , திருவண்ணாமலையில் தான் என்று கூறிய பிறகு அவர் சமாளித்து திருவண்ணாமலை பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளியுங்கள் என்று கூறினார்.
ஏற்கனவே ராம சீனிவாசன் விருதுநகர் தொகுதியை தான் தலைமையிடம் கேட்டிருந்தார், ஆனால் விருதுநகர் தொகுதி ராதிகாவுக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு மதுரை தொகுதி கிடைத்ததால் அவர் கன்பியூஸ் ஆகிவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva