ரஜினிக்கு கிடைத்தது; கமலுக்கு கிடைக்காதது ஏன்?
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமல்ஹாசனுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் கலந்துக்கொள்ள பலருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. அதில், அண்டை நாட்டு தலைவர்களும் அடக்கம்.
தமிழகத்தை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பின் பெயரில் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினியும் நாளை விழாவில் பங்கேற்பேன் என குறிப்பிட்டிருந்தார். அதோடு கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக் செய்திகள் வெளியாகியது.
ஆனால், தற்போது பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் கமலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ரஜினி பாஜகவிற்கு ஆதரவாக பேசுவதாலும், ஆனால், கமல் அப்படி இல்லாததாலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.