பத்திரிக்கையாளர்களை புண்படுத்தும் எண்ணம் இல்லை: ரஜினி!
தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கோபத்துடன் பதிலளித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் ஆவேசமாக பேசினார்.
இதனால், நிருபர்களை அவமதிக்கும் விதமாக பேசிய நடிகர் ரஜினிக்கு பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனத்தை தெரிவித்ததோடு, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். அதில், விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என பதிவிடப்பட்டிருக்கிறது.