திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 31 மே 2018 (12:57 IST)

ரஜினி சொன்ன சமூக விரோதி திமுகதான் - முட்டுக்கொடுக்கும் நமது அம்மா நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாரால் தாக்கப்பட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். 

 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரஜினி “ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம். எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும். போலீசாரை தாக்கிய பின்னரே அங்கு பிரச்சனை பெரிதானது. அந்த சமூக விரோதிகளை அரசு தண்டிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். இந்த விவகாரமும் பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
 
இந்நிலையில், ரஜினியின் இந்த கருத்தை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘நமது அம்மா’ வரவேற்றுள்ளது. 
 
ரஜினிகாந்த் மனசாட்சிபடி மக்களிடம் உண்மையை பேசியிருக்கிறார்.  விஷக்கிருமிகளை அம்மா ஒடுக்கினார் என்பதை ரஜினி மனம் திறந்து பாராட்டியதும், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கலவரம் குறித்து தமிழக முதலமைச்சர் எக்கருத்தை முன் வைத்தாரோ அதையே வழிமொழிந்து, சமூக விரோதிகள் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்ததால்தான், அது வன்முறை வெறியாட்டமாக வடிவம் எடுத்தது என்பதை ரஜினிகாந்த்தும் எடுத்துரைத்திருப்பது வரவேற்கத்தக்கது. 
 
குறிப்பாக, 99 நாள்களாக நடைபெற்றுவந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், அமைதி வழியில் நிகழ்ந்துவந்த நிலையில், நூறாவது நாள் போராட்டத்தில் கீதா ஜீவன் தலைமையில் தி.மு.க-வினர் உட்புகுந்ததற்குப் பிறகுதான் அமைதி வழிப் போராட்டம், கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிச்சூடு என களேபரமானது என்பதை கருக்கொண்டு பார்க்கிறபோது, ரஜினிகாந்த் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கும் விஷக் கிருமிகளும் சமூக விரோதிகளும் தி.மு.க-வினர்தான் என்பதில் எள்ளவும் ஐயமில்லை” என நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.