வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (14:50 IST)

முரசொலி கேலி… பின்பு வருத்தம்! –ரஜினியை டார்கெட் செய்கிறதா திமுக.?

திடீரென முரசொலி மூலம் ரஜினி பற்றி கேலி செய்தி வெளியிட்டு ரஜினியை டார்கெட் செய்த திமுக இன்று அதே முரசொலியில் வருத்தம் தெரிவித்துள்ளது.

வரேன், வரேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜினிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கமல் தனது அரசியல் வருகையை உறுதி செய்து கட்சியை ஆரம்பித்து ரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதையடுத்து இனிமேலும் பொறுக்க முடியாது ரஜினி ரசிகர்கள் வெகுண்டெழ ரஜினியும் தனது அரசியல் வருகையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி உறுதி செய்தார். இருந்தாலும் திடீரென ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகைக்கு ஒரு பொதுவான காரணமிருந்தது. அது, ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கலைஞரின் செயலிழப்பு மூலம் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் வெற்றிடம்.

கமல் வேகமாக அரசியல் பணிகளை செய்து வர இன்னும் கட்சி பெயரை கூட அறிவிக்காமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரஜினி. என்னதான் கமல் மும்முரமாக மக்கள் பணிகளில் ஈடுபட்டாலும் அறிவிக்கப்படாத ரஜினியின் கட்சியுடனயே சகக் கட்சிகள் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் பாஜக, அதிமுக, தமாக மற்றும் விசிக போன்ற கட்சிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் ரஜினியோடு பேச்சுவார்த்தைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அனைவரையும் ரஜினி சிரித்து மழுப்பி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் ரஜினி தன் மனதில் கூட்டணி பற்றி எந்த முடிவும் இன்னும் எடுக்காததே என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனித்துப் போட்டியிடுவதே ரஜினியின் விருப்பமாக இருப்பதாகவும் தெரிகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டி என்று ஏற்கனவே அறிவித்துள்ளதால் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் போது இப்போதே கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டாமென்று ரஜினி நினைப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கமல் திமுக மற்றும் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளதாலும், ரஜினி கூறும் ஆன்மீக அரசியல் திமுக வுக்கு ஒத்துப்போகாது என்பதாலும் அப்படியே திமுக சமரசம் செய்து கொண்டாலும் ரஜினி கூட்டணிக்குள் வரமாட்டார் என்பதாலும்தான் திமுக ரஜினியை வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. மேலும் கமலை விட ரஜினியே தங்களுக்கு வலுவானப் போட்டியாளராக இருப்பார் எனவும் திமுக நினைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்புறம் ஏன் இன்று திடீர் வருத்தம் என யோசித்தால், ரஜினி தற்போது சன்பிக்சர்ஸின் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். எனவே அவரைப் பற்றிய இந்த கேலி செய்திகள் தங்கள் படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் என நினைத்த அந்நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் பெயரால் இந்த வருத்தம் தெரிவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏற்கனவே சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசிய விஜய்யை திமுக மேடையில் விமர்சித்த வே மதிமாறனின் வீடியோக்களை யூட்யூப்பில் இருந்து அகற்ற சொல்லி செய்தி ஊடகங்களுக்கு சன்பிக்சர்ஸ் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.