வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (19:20 IST)

நடிகர் விஜயை கைது செய்ய கோரி புகார் கொடுத்த ராஜேஸ்வரி பிரியா

‘தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை முடக்கும் வண்ணம் ஆபாச அச்சுறுத்தல்களால் மிரட்டி வரும் நடிகர் விஜய்யை உடனடியாக கைது செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’  எனக் கோரி காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்களை நேரடியாக சந்தித்து , அனைத்து மக்கள் அரசியல் கட்சி  தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு கொடுத்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில்,

‘’கடந்த ஜூன் 22 ஆம் தேதி 2023 அன்று 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் திரு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தின் "நா ரெடி" பாடல் ஒன்று சோனி சவுத் மியூசிக் என்ற youtube சேனல் வெளியிட்டது.

அந்தப் பாடல் வரிகள் குறித்து நான் தனியார் இணையதள சேனலில் பேட்டி அளித்திருந்தேன். அந்தப் பேட்டியில் புகை மற்றும் மது குறித்த வரிகளைப் பற்றி

" பாட்டிலில் பத்தாது நான் குடிக்க அண்டாவில் கொண்டு வா சியர்ஸ் அடிக்க"
"பத்த வச்சு புகைய இழுத்தா பவர் கிக்"
"விரலுக்கு இடையில் தீபந்தம் நான் ஏத்தட்டா"
"மில்லி உள்ள போனா கில்லி வெளியே வருவாண்டா"
"புகையிலை பவர் கிக்கு"

போன்ற வரிகளை எழுதிய அசல் கோளாறு மற்றும் பாடலை பாடிய நடிகர் விஜய் அவர்களுக்கு சமூகத்தைப் பற்றிய சிந்தனை இல்லை என்பதனை குறிப்பிட்டு இருந்தேன். மேலும் இந்தப் பாடலை பார்த்து ஒரு இளைஞனோ அல்லது ஒரு மாணவனோ பாதிக்கப்பட்டால் அதற்கு நடிகர் விஜய் அவர்களோ அல்லது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களோ பொறுப்பு ஏற்பார்களா? என்று கேள்வி கேட்டிருந்தேன்.

அந்த வீடியோ YouTube செய்தி சேனலில் 70 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றது. அதன் பின்னர் தான் ஆரம்பித்தார்கள் விஜய் ரசிகர்கள் அவர்களது அசிங்கமான நடவடிக்கைகளை ஆம் இணையதளம் முழுவதும் மீம்ஸ்கள், கேளிகள், கிண்டல்கள், ஆபாச பேச்சு, சித்திகரிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் பல அலைபேசி அழைப்புகள் தவறான குறுஞ்செய்திகள் என்று தொடர்ந்து பல்வேறு ஆபாச தரக்குறைவான பெண்களை மிக மோசமாக இழிவுபடுத்தும் வகையிலான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு கேவலமான சமூகத்தில் வாழ்கிறோம் என்பது எனக்கு அவமானமாக உள்ளது. பெண்கள் அரசியல் களத்தில் தனது பங்களிப்பினை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக எனது வெளிநாட்டு வாழ்க்கையை துறந்து தாய் நாட்டிற்கு திரும்பியவள் நான். சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் நான் செய்த போராட்டங்கள் பல. கடந்த 2019 ஆம் ஆண்டு அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சியினை சட்டப்படி பதிவு செய்து அதில் நான் தலைவராக தொடர்ந்து வருகிறேன். தொடர்ந்து சமூக சீரழிவுக்கு காரணமான பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன். வருங்கால தலைமுறையினர் மீது உள்ள அதீத அக்கறையின் அடிப்படையிலேயே லியோ பட பாடலில் இடம்பெற்றுள்ள சமூகத்தை சீரழிக்க கூடிய வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். என்னுடைய எதிர்ப்பு பல்லாயிரக்கணக்கான தாய்மார்களின் எதிர்ப்பு என்பதனை நான் பேசியதினை பார்த்தவர்கள் என்னை வாழ்த்தியதன் அடிப்படையில் தெரிந்து கொண்டேன்.

ஒரு அரசியல் கட்சியின் தலைவராக செயல்பட்டு வரும் எனக்கே இவ்வளவு ஆபாச அச்சுறுத்தல்கள் என்றால் ஒரு சாமானிய பெண் தனது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் திரைப்பட நட்சத்திரங்களுக்கு எதிராக குரல் எழுப்பினால் எந்த நிலைக்கு தள்ளப்படுவாள் என்பதனை நினைத்தே பார்க்க முடியவில்லை.

மேலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலேயே இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஏனென்றால் இவ்வாறான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் இணையதள கணக்குகள் அனைத்தும் பெரும்பாலாக விவரம் இல்லாத டிவிட்டர் கணக்குகளாகவே உள்ளன. அவ்வாறு இயங்கும் கணக்குகள் நடிகர் விஜய் அவர்களை டேக் செய்தே ஆபாசமான பதிவுகளை இடுகின்றனர். எனவே நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரிலேயே இது போன்ற பதிவுகள் பதிவிடப்படுகின்றது என்பதனை டேக் செய்வதன் மூலம் உணர முடிகிறது. இவ்வாறு தன்னுடைய பண பலத்தை பயன்படுத்தி சமூகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்களை முடக்கும் வண்ணம் ஆபாச அச்சுறுத்தல்களால் மிரட்டி வரும் நடிகர் விஜய் அவர்களை உடனடியாக கைது செய்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ ; என்று தெரிவித்துள்ளார்.