வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (17:03 IST)

சென்னையை மிரட்டும் மழை! வீடுகளை சூழ்ந்த தண்ணீர்! – எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

Chennai Rain
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


 
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட  பல மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று (29.11.2023) காலை முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. சென்னை வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர், ராயபுரம், மேற்கு மாம்பலம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, சூளைமேடு, நுங்கம்பாக்கம், அசோக் நகர், கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.  பல்வேறு இடங்களில் சாலைகளே தெரியாத அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Chennai Rain

 
இதை அடுத்து ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை துரைசாமி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதையில் தேங்கி இருந்த மழைநீரை அகற்றி மீண்டும் போக்குவரத்து துவங்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரை 145 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் அதனை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரும்பாலும் இடங்களில் மழைநீர் அகற்றிவிட்டதாகவும், மழையின் காரணமாக ஐந்து மரங்கள் விழுந்ததாகவும் அவை இரவோடு இரவாக அகற்றப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Rain

 
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் 12 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது.

இதனால் செங்குன்றத்தில் உள்ள பாலவாயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

Chennai Rain

 
இதையடுத்து மழைநீர் தேங்கிய வீடுகளில் சிக்கிய சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரை செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியது:

இலங்கை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் அதே வேளையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று அவர் கூறியுள்ளார். டிசம்பர் 3ஆம் தேதி இது புயலாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து 4ஆம் தேதி வட தமிழகம் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி செல்லும் என்று பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Rain

 
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 59 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், அதிகபட்சமாக திருவள்ளூர் ஆவடி பகுதியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் எனவும் கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் எனவும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களிலும், 2ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் 3ஆம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.