திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (23:58 IST)

ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பற்றி இனவெறி விமர்சனம் - சஸ்பெண்ட் ஆன மலேசிய ஹாக்கி வீராங்கனை

இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் புக்கிட் ஜலீலில் உள்ள தேசிய மைதானத்தில் வழங்கிய இசை கச்சேரி குறித்து ஆன்லைனில் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்காக மலேசிய தேசிய அணி வீராங்கனை ஹனிஸ் நதியா ஓன், மலேசிய ஹாக்கி கூட்டமைப்பால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தியர்கள் துர்நாற்றம் பிடித்தவர்கள் என்று மறைமுகமாக அவர் விமர்சித்திருந்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து ஹனிஸ் நதியா மீதான தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ள போதிலும், அந்த 26 வயதான வீராங்கனையின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி கடந்த ஜனவரி 28ஆம் தேதியன்று மலேசியாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைக் காண சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் திரண்டனர்.
 
இந்நிலையில், இசை நிகழ்ச்சி நடைபெற்ற புக்கிட் ஜலீல் அரங்கத்தில் துர்நாற்றம் வீசியிருக்கக்கூடும் என்று பொருள்படி இன்ஸ்டகிராமில் பதிவிட்டிருந்தார் ஹனிஸ் நதியா ஓன்.
 
குறிப்பிட்ட அந்த அரங்கில் ரஹ்மானின் நிகழ்ச்சிக்காக திரண்டிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மலேசிய இந்திய வம்சாவளியினர் ஆவர். எனவே அவர்களைக் குறிவைத்த ஹனிஸ் நதியா ஓன், தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததாகப் புகார் எழுந்தது.
 
இந்தியர்கள் துர்நாற்றம் பிடித்தவர்கள் என்று பொருள் வரும் வகையில் பதிவிட்டமைக்காக ஹனிஸ் நதியா ஓன் மன்னிப்பு கோர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
 
இந்தியா - ஆஸி முதல் டெஸ்ட்: ஜடேஜா, அஸ்வின் மாயாஜாலப் பந்துவீச்சில் 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா
 
இனவாத கருத்துகளை கடுமைமயாக எதிர்க்கும் மலேசியா
 
மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் இனவாத கருத்துகள் தொடர்பாக அந்நாட்டு அரசாங்கங்கள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இனவாத கருத்துகளை அந்நாடுகள் சகித்துக் கொள்வதில்லை.
 
மலேசியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மலாய், சீன இனங்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களின் எண்ணிக்கை உள்ளது. பல லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழும் நாட்டில் இனவாத கருத்துகளை எந்தவிதப் பேதமும் இன்றி அனைவருமே கண்டித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மலேசிய தேசிய மகளிர் அணி சார்பாக அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்க ஹனிஸ் நதியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
 
அவரது சமூக ஊடகப் பதிவு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
முன்னதாக ஹனிஸ் நதியாவின் சர்ச்சைக்குரிய பதிவு குறித்து அறிந்த மலேசிய இளையர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்.
 
சமூக ஊடகங்களில் பதிவிடும்போது தேசிய விளையாட்டு வீரர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஹனிஸ் நதியா ஓன் மீதான நடவடிக்கை மற்ற விளையாட்டாளர்களுக்கு முக்கிய நினைவூட்டலாகவும் நல்ல பாடமாகவும் இருக்கும் என நம்புவதாக அந்த அமைச்சு தெரிவித்தது.
 
 
 
 
இதற்கிடையே, ஹனிஸ் நதியா தாம் ஓர் இனவாதியல்ல என்றும் தமது நட்பு வட்டத்தில் இந்தியர்கள் பலர் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு இன மக்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்துள்ள ஹனிஸ் நதியா மிகவும் பணிவானவர் என்றும் ஒழுக்கமாகச் செயல்படக்கூடியவர் என்றும் மலேசிய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் முஹமட் நசிஹின் நுப்பி இப்ராகிம் (Mohd Nasihin Nubli Ibrahim) கூறுகிறார்.
 
அதேவேளையில், மற்ற இனங்களை சிறுமைப்படுத்துபவர்களுக்கு மலேசியாவில் இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் ரஃபிடா தெரிவித்தார்.
 
"கடந்த ஜனவரி 28ஆம் தேதி நான் பதிவிட்ட கருத்துக்குப் பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது பத்தாண்டுகால ஹாக்கிப் பயணத்தில் மலேசியாவுக்காக தொடர்ந்து போராரடி வரும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த நண்பர்கள் எப்போதும் என்னை சூழ்ந்திருந்தனர். இந்நிலையில் எனது கவனக்குறைவான செயல்பாட்டுக்காகவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்," என்று ஹனிஸ் நதியா ஓன் கூறியுள்ளார்.
 
இனவாத கருத்துகளும் கடந்த கால சர்ச்சைகளும்!
 
மலேசியாவில் அவ்வப்போது சிலர் இனவாத கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் சர்ச்சைகள் வெடித்த போதிலும், அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கியதில்லை.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் 'இண்டர்லொக்" என்ற இலக்கிய பாடநூல் தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இந்நூலில் இடம்பெற்றிருந்த ஒரு புதினம் தென்னிந்தியர்களை நோகடிப்பதாக உள்ளது என்றும் குறிப்பிட்ட சமூகத்தினரை 'பறையர்கள்' என்று குறிப்பிடுவதாக உள்ளது என்றும் பலரும் சுட்டிக்காட்டினர்.
 
பின்னர் இந்த விவகாரத்தில் மலேசிய அரசாங்கம் தலையிட்டதை அடுத்து சிக்கல் முடிவுக்கு வந்தது.
 
எனினும் பறையர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி்யதால் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்தும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கினார்.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது 'பறையா' என்ற வார்த்தையைப் அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அவர் இழிவுபடுத்தி விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது அவர் 'பறையர்' என்று குறிப்பிட்டதாக ஒரு தரப்பினர் கருதினர்.
 
அதேசமயம் மகாதீர் குறிப்பிட்ட ஒரு பிரிவினரைச் சுட்டிக்காட்டி இவ்வாறு பேசவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
 
இதையடுத்து பிரதமராக இருந்த மகாதீர் மீது காவல்துறையின் புகார் அளிக்கப்பட்டது. இனி்று மலேசியப் பிரதராக உள்ள அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சியினர்தான் மகாதீர் மீது புகார் அளிக்க அச்சமயம் வரிந்துகட்டினர்.
 
மேலும், பிரதமர் மகாதீர் தனது செயல்பாட்டுக்காக வெளிப்படையாக அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி தொடர்பாக இனவாத (இனவெறி) கருத்து தெரிவித்த மலேசிய ஹாக்கி வீராங்கனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் அந்நாட்டின் சார்பாக போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.