செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 ஜனவரி 2025 (12:53 IST)

புதுச்சேரி பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கொண்ட கும்பல் அட்டகாசம்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் ஒரு மாணவிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ள நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த மாணவி படித்து வருகிறார். கடந்த ஞாயிறு அன்று விடுமுறை என்பதால் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு பகுதியில் சக மாணவருடன் அவர் பேசிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த மாணவரை அடித்து விரட்டி, விட்டு மாணவியிடம் அத்துமீறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த கும்பலில் இருந்து தப்பி மாணவி ஓடிய போது காயம் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அந்த மாணவி கூச்சலிடவே மூன்று பேரும் தப்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ள நிலையில், அத்துமீறிய கும்பலில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்தான் மற்ற இருவரையும் அழைத்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதை அடுத்து இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.



Edited by Siva