மருத்துவம் போல் பொறியியல் படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு? முதல்வர் முயற்சி..!
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், பொறியியல் உள்பட மற்ற படிப்புகளுக்கும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து புதுவை முதல்வர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுவை முதல்வர் ரங்கசாமி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் வழங்கப்படும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு போன்று, பொறியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகளுக்கும் வழங்க, புதுவை அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இது நடைமுறைக்கு வந்தால், அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு அனைத்து படிப்புகளுக்கும் முன்னுரிமை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகிறது.
Edited by Siva