கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திடீரென வெடித்த போராட்டம்.. என்ன காரணம்?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வரும் வழியை திடீரென, பேருந்து நிலையத்தை பராமரிக்கும் தனியார் நிறுவனம் மூடியதால், அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வரும் வழியை மூடியதாக, தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இதனால், அரசு பேருந்துகளுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழியை மூடியதன் விளைவாக, பயணிகள் ஆம்னி பேருந்துகளுக்கு சென்றதாகவும், போராட்டம் நடத்தும் ஊழியர்கள் கூறி வருகின்றனர். மேலும், பயணிகள் பேருந்து நிலையத்திற்கு முன் நுழையும் போதே, அவர்கள் எந்த ஊருக்கு பயணம் செய்கிறார்கள் என்று கேட்டு, அவர்களை தனியார் பேருந்துகள் இருக்கும் இடம் நோக்கி கை காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், அரசு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது.
மேலும் பேட்டரி வாகனத்தின் மூலம் பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் ஊழியர்கள், பயணிகளை நேரடியாக ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால், அரசு பேருந்துகளுக்கு பயணிகள் குறைவாக வருவதாகவும், பயணிகள் சேராததால் சில நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணத்தை தொடங்க முடியாமல் போவதாகவும், அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக, குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran