1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:50 IST)

நெடு வாசலை நோக்கி நம் பயணம் (பாகம் 1)

நெடுவாசலில் சினம் கொண்டக் கூட்டம் ஒன்று, கொட்டும் பனியையும் பாராமல் வெயிலையும் பொருட்படுத்தாமல் நான்காவது நாளாக அமர்ந்திருக்கிறது. முன்பு நாட்டைக் காக்க புறப்பட்டோம்,  பின், மொழியை க் காக்க புறப்பட்டோம், பின் பாரம்பரியத்தை, பண்பாட்டை, நம் ஜல்லிக்கட்டை க் காக்க புறப்பட்டோம். இது  நம் மண் காக்க புறப்பட வேண்டிய நேரம்.

நதியை இழந்தோம் ! வளத்தை இழந்தோம் ! ஆனால் எம் மண்ணை இழக்க மாட்டோம் என்ற முழக்கங்கள் கேட்கிறது. இடிந்தகரையை போல ஒரு நெடிய போராட்டத்திற்கு நம்மை தயார் செய்ய வேண்டிய நேரம் இது.
 

 

நாசம் ! நாசம் ! சர்வ நாசம். முற்றிலும் விஷப் பரீட்சை. டெல்டா மாவட்டங்களை தரிசாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் இது.

அது என்ன மாயமோ !  மந்திரமோ ! தெரியவில்லை. மத்திய அரசின் பயனற்ற, மழுங்கிய, அரசியல் சதுரங்கத்தில் விலை போன மூளைக்கு எய்ம்ஸ் மருந்துவமனை போன்ற நலத்திட்டங்கள்  அறிவிக்கும் பொழுதெல்லாம் தமிழகம் என்ற மாநிலம் ஞாபகத்துக்கு வருவதில்லை. நியுக்கிளியர்,  நியுட்ரினோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் என்றால் மட்டும் மாநிலத்திற்கு இழைத்த சவலை பிள்ளையாய்  தமிழகத்தின் நினைப்பு வரும்.

மரியாதைக்குரியவர்களே ! நாடு நலம் பெற தமிழகம் தியாகம் செய்ய வேண்டும் என்கிறீர்களா ? ஏற்கனவே  நியுக்கிளிர்,  நியுட்ரினோ திட்டங்கள் என தமிழகம் நிறைய தியாகம் செய்து விட்டது.  இந்த முறை நாடு நலம் பெற, குஜராத், கேரளா போன்ற மாநிலங்கள் தியாகம் செய்யட்டும் !

 
களத்தில் நிற்பவன் என் சகோதரன், அவன்  தேச துரோகி  என்றால் அவனுக்கு குரல் கொடுக்கும் நானும் தேச துரோகி தான். பெரியவர். ஹச் ராஜா, அவர்களுடைய மொழியில் நான் வளர்ச்சிக்கு எதிரான தேச விரோதி, நக்சலைட்.

ஐய்யா இல கணேசன் அவர்களே ! எங்களுக்கு இந்த திட்டத்தில் சரியான புரிதல் இல்லை தான், உங்களை ராஜசபா எம் பி யாக தெரிந்தெடுத்த மத்திய பிரதேசத்தில் அங்குள்ள மக்களின் புரிதலுடன் அங்கேயே செயல்படுத்த நீங்கள் பரிந்துரைக்கலாமே ? 

ஐய்யா பொன்னார்  அவர்களே ! மக்கள் இல்லையே அரசு இல்லை, மக்கள் ஒப்புதல் இல்லையேல் திட்டம் கிடையாது என்கிறீர்கள் ஆனால் இது வரை செயல்படுத்தப்பட்ட நியுக்கிளிர்,  நியுட்ரினோ திட்டங்கள் அனைத்தும் மக்களின் ஒப்புதல் பெறப்படாமல்   செயல் படுத்தப்பட்டவையே. கூடங்குளம் அணு உற்பத்தி மையத்தை இடிந்தகரை வாசிகள் பெரும் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்களா என்ன  ?

முந்தய அனுபவங்கள் தோல்வி அல்ல, அது ஒரு படிப்பினை. மரணம் மா வீரனுக்கு தரப்படும் பரிசு, அந்த மரணத்தின் விளிம்பிலும் மரணத்தை முத்தமிட்டு தமிழன் சொல்வான், நான் தமிழன் ! என்று.

விடியும் வரை தொடரட்டும் நெடு வாசல் போராட்டம்



இரா காஜா பந்தா நவாஸ்
பேராசிரியர்
[email protected]