தேர்தலில் ரஜினி ரசிகர்களை ஈர்க்கவா இந்த விருது? – மத்திய அமைச்சர் விளக்கம்!
நடிகர் ரஜினிகாந்த்க்கு விருது வழங்கப்பட்டதற்கு தமிழக அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “இந்திய சினிமாவில் முக்கிய பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக முன்பு அறிவித்த போது அவரது ஆதரவை பெற முயற்சித்த கட்சிகளில் பாஜகவும் ஒன்று. ஆனால் அவர் அரசியலுக்கு வராமல் விலகிவிட்டார். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த்க்கு மிக உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களின் வாக்குகளை கவர்வதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ”நடிகர் ரஜினிகாத்தின் திரைத்துறை பங்களிப்பிற்காகவே விருது வழங்கப்பட்டது. தமிழக அரசியலுக்கும் விருது வழங்கப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை” என தெரிவித்துள்ளார்.