1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (20:33 IST)

தமிழக பாரம்பரிய பொருளை சீன அதிபருக்கு பரிசளித்த பிரதமர்!

இரண்டாம் உச்சி மாநாட்டிற்காக தமிழகம் வந்த சீன அதிபருக்கு தமிழ் கலாச்சார பொருட்களை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சின்பிங் சந்திக்கும் இரண்டாவது உச்சி மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மதியம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சீன அதிபர் மாலை மாமல்லபுரத்தை பார்வையிட சென்றார். அவரை வரவேற்று உபசரித்து மாமல்லபுர சிற்பங்களின் பெருமைகளை பற்றி எடுத்துரைத்தார் பிரதமர் மோடி.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி, சண்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வந்தது பலருக்கு வியப்பை அளித்தது. மோடி வேஷ்டி, சட்டை அணிவது இதுவே முதல்முறையாகும். பிறகு மாலை நடந்த கலைநிகழ்ச்சிகளை இருவரும் கண்டுகளித்தனர். பிறகு சீன அதிபருக்கு நினைவு பரிசளித்தார் பிரதமர் மோடி.

தமிழக பாரம்பரிய அடையாளங்களான நாச்சியார்கோவில் அன்ன விளக்கையும், பலகை படம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் ஓவியத்தையும் பரிசளித்தார். தொடர்ந்து பல நாடுகளிலும் தமிழில் பேசி அசத்திய பிரதமர், தற்போது தமிழ் மரபுப்படி உடையணிந்தும், தமிழர் பண்பாட்டு பொருட்களை பரிசளித்தும் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.