செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:17 IST)

"த.வெ.க மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்" - பனையூரில் முக்கிய ஆலோசனை..!!

Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது.  
 
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், கட்சியின் முதல் மாநாட்டை நடத்த தீவிரம் காட்டி வருகிறார். முதலில் செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. 
 
அனுமதி தாமதமானதை அடுத்து விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன மாநில மாநாடாக இது அமையும் என்றும் விஜய் கூறியிருந்தார்.  
 
இந்நிலையில் மாநாட்டிற்கான பந்தல்கால் நடும் பணி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
 
மாநாட்டிற்கு மாவட்ட வாரியாக எவ்வளவு தொண்டர்கள் அழைத்துவரப்பட வேண்டும், காவல்துறையினரின் விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது, சிறப்புற மாநாட்டை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 20-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.