திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (09:15 IST)

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளரை பிரசாந்த் கிஷோர் தேர்வு செய்கிறாரா?

திமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 42 ஆண்டுகளாக இருந்த க. அன்பழகன் அவர்கள் கடந்த சனிக்கிழமை காலமானதை அடுத்து விரைவில் புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்ய அக்கட்சி முடிவு செய்துள்ளது. இந்த பதவியை பிடிக்க திமுகவின் முன்னணித் தலைவர்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக திமுக பொருளாளராக இருக்கும் துரைமுருகன், திமுக மக்களவை எம்பிக்கள் தலைவராக இருக்கும் டிஆர் பாலு, திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கேஎன் நேரு, விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் முக ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கும் எ.வ.வேலு ஆகியோர் திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் முக்கியமான ஒருவர் தான் அடுத்த பொதுச் செயலாளர் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருப்பதாகவும், எனவே அவருடைய நம்பிக்கையை பெறும் முயற்சியில் போட்டியாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அடுத்த பொதுச்செயலாளரை பிரசாந்த் கிஷோர் தான் முடிவு செய்வார் என்றும் ஒருதரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
 
துரைமுருகன், டிஆர் பாலு ஆகியோர் ஏற்கனவே முக்கிய பதவிகளில் இருப்பதால் அவர்களுக்கு திமுக பொதுச்செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அனேகமாக எ.வ. வேலு அல்லது பொன்முடி ஆகிய இருவரில் ஒருவர் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன