செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (13:33 IST)

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

bonus
பொங்கல் போனஸ் ஆக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்க தொகையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
 
தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. 
 
இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. 
 
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். 
 
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2022- ஆம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும்; 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்; 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் 'சாதனை ஊக்கத்தொகை' வழங்கப்படும். 
 
இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து பதினேழாயிரத்து நூற்று இருபத்தொன்பது பணியாளர்களுக்கு, மொத்தம் ஏழு கோடியே ஒரு இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran