வாழ்த்து அட்டைலாம் பாத்து எவ்ளோ நாளாச்சு? – பள்ளிக்கல்வித்துறை பலே ஐடியா!
பொங்கலை முன்னிட்டு மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் விதமாகவும், வாழ்த்து அட்டை வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளிக்கல்வித்துறை வாழ்த்து அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொங்கல் போன்ற கலாச்சார விழாக்களின்போது புத்தாடைகள், பலகாரங்கள் எவ்வளவு பிரசித்தி பெற்றவையோ அந்த அளவு புகழ்பெற்ற ஒன்று வாழ்த்து அட்டைகள். 90களில் பண்டிகைகளின்போது தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு விதவிதமான வாழ்த்து அட்டைகள் வழங்குவது மக்களிடையே பிரபலமாக இருந்தது.
தற்போது மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்கும் விதமாகவும், வாழ்த்து அட்டைகள் வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாகவும் பள்ளிக்கல்வித்துறை பொங்கலுக்காக சூரிய வாழ்த்து அட்டையை வெளியிட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு ஆஸ்ட்ரோனமிக்கல் சயின்ஸ் சொசைட்டி , எய்ட் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து வடிவமைத்துள்ளன.
அட்டையின் ஒரு பக்கம் சூரிய பொங்கல் வாழ்த்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் மறுபுறம் சூரியனை பற்றிய அறிவியல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் பொங்கல் வாழ்த்துடன், அறிவியல் தகவல்களையும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்த திட்டம் உள்ளது. இந்த கடிதங்களை மாணவர்கள் மட்டுமன்றி யார் வேண்டுமானாலும் வாங்கி தங்கள் விருப்பமானவர்களுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K