வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜனவரி 2019 (14:00 IST)

பிரதமர் விழாவில் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இல்லை – பொன்னார் மழுப்பல் !

நேற்று முன் தினம் தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக  பிரதமர் மோடி நேற்று முன்தினம் மதுரை வந்தார் இந்த விழாவில். தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பிரதமரும் தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் ஆளுநர் கலந்துகொண்ட இத்தகைய முக்கியமான அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தோ அல்லது தேசிய கீதமோ இசைக்கப்படவில்லை. நாடு மற்றும் நாட்டுப் பற்று பற்றி மக்களுக்கு விரிவாக பாடமெடுக்கும் பாஜகவினர் தேசிய கீதத்திற்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் உரிய மரியாதைக் கொடுக்காமல் அவமதித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸின் தமிழக தலைவரான திருநாவுக்கரசர் ‘மதுரை அடிக்கல் நாட்டி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்த மத்திய - மாநில அரசுகளை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பியபோது ‘எங்களுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கக் கூடாது என்ற எந்த எண்ணமும் இல்லை. எந்தவகையிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம் ஏற்படுவதை பிரதமர் ஏற்றுக்கொள்ள மாட்டார். மத்திய மாநில அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளித்தே நடத்துகிறோம்’ என மழுப்பலானப் பதிலைக் கூறிச்சென்றார்.