ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (12:04 IST)

பிரதமரிடம் என்ன பேசினார் எடப்பாடி பழனிச்சாமி?

கடந்த சனிக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதற்கு முன் பிரதமரை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்த எடப்பாடி பழனிசாமி 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.

அதில் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் தமிழகத்திற்கு தண்ணீருக்கான ஒரே வழி காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம் மட்டுமே. அதனால் அந்த திட்டத்திற்கு உடனடியாக முன்னுரிமை தரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துதல், மேகதாது அணைக்கு அனுமதி மறுத்தல் ஆகியவற்றையும் அந்த மனுவில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னை, ராமநாதபுரம், ஓசூர் பகுதிகளில் புதிய விமான நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியையும், மேலும் மத்திய அரசால் மாநிலங்களில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு வேண்டிய நிதியையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதைத்தாண்டி தனது கட்சி பிரச்சினைகள் குறித்தோ, மற்ற பிரச்சினைகள் குறித்தோ எடப்பாடி பழனிசாமி பேசினாரா? என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் “எடப்பாடி தனது பதவி பற்றி பேசதான் டெல்லி சென்றாரே தவிர மக்களுக்காக அல்ல” என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.