ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவிற்கு பல கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை துணை எதிர்கட்சி தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது இரங்கலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ” தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தினேன். அவர்களின் ஆன்மா இறை நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் “தமிழக முன்னாள் முதலமைச்சரும்,தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.