காமராஜ் பல்கலையில் நிர்மலாதேவிக்கு ஏ.சி அறையா? ராமதாஸ் திடுக்கிடும் தகவல்
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்ட அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் அவரை பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நிர்மலாதேவிக்கு காமராஜர் பல்கலையில் ஏசி அறையை அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகி ஒருவரே ஒதுக்கியதாக கூறப்படுவது. இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழகத்தின் அதிகாரவரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தில் எந்த மரியாதையும் இருக்காது. ஆனாலும், நிர்மலாதேவிக்காக குளிரூட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத்துறை தலைவராகவும் பல்கலைக்கழக மானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநருமான வி.கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். அவர் அங்கு 10 நாள்களுக்கும் மேலாகத் தங்கி, அவரது சொந்த வேலைகளைக் கவனித்திருக்கிறார்'' என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினால் மட்டுமே நிர்மலாதேவிக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்பது தெரியவரும் என்றும், எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.