வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (15:43 IST)

அரசையும், மக்களையும் அவமானப்படுத்தும் செயல்! ஆளுனருக்கு பாமக கண்டனம்?

இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் நடந்து கொண்ட விதம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்ற நிலையில் ஆரம்பமாக ஆளுநர் உரையை வாசித்தார். ஆனால் அதில் அவர் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்த ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையையும், மற்ற சில சொற்றொடர்களையும் தவிர்த்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் தமிழ்நாடு அரசு அச்சடித்த உரையே பதிவேற்றப்படும், ஆளுனர் பேசியது பதிவேற்றப்படாது என முதல்வர் கூறிய நிலையில் சில நிமிடங்களில் ஆளுனர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் ஆளுனரின் இந்த செயலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்.பி.அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி அன்புமணி ராமதாஸ் “தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்!” எனக் கூறியுள்ளார்.

மேலும் “தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும்! அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த போது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்!” என பேசியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாமக தற்போது மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுனரின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பேச்சுகளை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K