திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:49 IST)

ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் கண்ணாடி துண்டுகள்.! சாப்பிட்டவரின் வாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு..!!

BBQ Chicken
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூரில் செயல்படும் பிரபல ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் கண்ணாடி துண்டுகள் கிடந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 
ஶ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் பிரபலமான ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த முகமது பாரித் என்பவர், குழந்தைகளுக்காக பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கி சென்றார். வீட்டுக்கு சென்று சிக்கனை சாப்பிட்ட போது பாரித் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சிக்கன் துண்டுகளை பிரித்து பார்த்திருக்கிறார். 
 
அப்போது சிக்கன் துண்டு உள்ளே ஏராளமான உடைந்த கண்ணாடி துண்டுகள்  கிடந்துள்ளது. உடனடியாக அவர் சமந்தப்பட்ட கடைக்குச் சென்று ஊழியர்களிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, சமையலறையில் கண்ணாடி பாட்டில் ஒன்று விழுந்து உடைந்ததாகவும், உடனடியாக உடைந்த கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தியதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்த மசாலா பாத்திரத்திற்குள் கண்ணாடி துண்டுகள் விழுந்ததை பார்க்காமல், அப்படியே மசாலாவை சிக்கனில் தேய்த்து பொரித்து வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, கண்ணாடி துண்டு இருந்த சிக்கனை தனக்கு பதிலாக குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என பாரித் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில் அலட்சியமாக செயல்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பாரித் புகார் அனுப்பி உள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.