ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (15:33 IST)

மாணவி பாலியல் வன்கொடுமை.! கைதான நாதக மாஜி சிவராமன் போலி என்சிசி பயிற்சியாளர் என அதிர்ச்சி தகவல்..!!

Sivaraman
கிருஷ்ணகிரி அருகே  12 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன், போலி என்சிசி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி.முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பள்ளி வளாகத்தில் தங்கி இந்த முகாமில் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் என்சிசி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவி கடந்த 8ஆம் தேதி பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அதிகாலை 3 மணிக்கு வந்த என்சிசி பயிற்சியாளர் காவேரிபட்டினத்தை சேர்ந்த சிவராமன், அந்த மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதுகுறித்து வெளியே சொன்னால், படிப்பே கெட்டுவிடும் என மாணவியை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் சாம்சனிடம் அந்த மாணவி தெரிவித்த போது, அவரோ பள்ளி பெயர் கெட்டுவிடும், இதை வெளியே சொல்ல வேண்டாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யகலா விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சாம்சன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து பள்ளியின் முதல்வர், அங்கு பணிபுரியும் 7 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதில் ஒருவர் முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர் ஆவார். தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான சிவராமன், சுதாகர் ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் தனிப்படை போலீஸார் கோவையில் வைத்து அவரை கைது செய்தனர். அப்போது அவர் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்து மாவுக் கட்டு போடப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 13 மாணவிகளுக்கு சிவராமன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

சிவராமன் நாம் தமிழர் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவராமனிடம் போலீசார் நடத்தி விசாரணையில்,   அவர் போலி என்சிசி பயிற்சியாளர் என்பது தெரியவந்தது. என்சிசி பயிற்சியாளராக வேண்டும் என்றால் சேலத்தில் உள்ள மத்திய அரசு மையத்தில் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அது போல் எந்த பதிவையும் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 
இவராகவே இந்த தனியார் பள்ளியை தொடர்பு கொண்டு கடந்த 4 அல்லது 5 மாதங்களாக என்சிசி பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். பள்ளி நிர்வாகமும் இவரிடம் பதிவு செய்த சான்றிதழை கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது.