1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (11:42 IST)

கோவை தேர்தல் முடிவை நிறுத்த கோரிய மனு தள்ளுபடி..! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

highcourt
கோவை மக்களவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.
 
கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
 
அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 
 
இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டோரை மீண்டும் பட்டியலில் இணைத்து ஓட்டுப்போட அனுமதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தது. 

 
ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?  என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஓட்டுப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.