செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (11:04 IST)

கோவிலை பூட்டிய மக்கள்: உடைத்து திறந்த போலீஸ்! – அரியலூரில் பரபரப்பு

அரியலூர் அருகே குறிப்பிட்ட சமூகத்தினர் கோவிலுக்குள் திருமணம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கோவிலை பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் நமங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் ஸ்டாலின். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணத்தை பக்கத்து கிராமமான செந்துறையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில் திருமணம் நடத்துவதற்காக ஒரு மாதம் முன்பே உரிய முறையில் அனுமதி பெற்றிருக்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர்.

இந்நிலையில் நேற்று திருமணத்திற்காக கோவிலுக்கு சென்று பார்த்தபோது கோவில் பூட்டப்பட்டிருந்ததை கண்டு ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வாயிற்கதவை இரும்பு சங்கிலியால் சுற்றி 11 பூட்டுகளை போட்டு பூட்டியிருக்கின்றனர் செந்துறை கிராம மக்கள்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸாருடன் அங்கு வந்த அறநிலையத்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் செந்துறை மக்களோ குறிப்பிட்ட சமூகத்தினர் இங்கு திருமணம் நடத்த கூடாது என்றும், இந்த கோவில் தங்களுடைய கிராமத்துக்கு உரியது என்றும் வாதிட்டுள்ளனர்.

பிறகு பேசி சமாதான முடிவு எட்டப்பட்டதையடுத்து கோவிலில் மாட்டியிருந்த பூட்டுகள் திறக்கப்பட்டன. அதில் இரண்டு பூட்டுகளுக்கான சாவிகள் காணாமல் போனதால் போலீஸார் பூட்டை உடைத்து கோவிலை திறந்தனர்.

இரு தரப்பு மக்கள் இடையேயான பிரச்சினையில் கோவில் பூட்டப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.