வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2024 (20:38 IST)

பேனா நினைவு சின்னம்..! தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் போட்ட முக்கிய உத்தரவு.!!

Kalaingar Memorial
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக அரசு சார்பில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியில் இடம்பெற்றுள்ள ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மெரினா கடற்கரையில் இருந்து தரை பரப்பில் 290 மீட்டர், கடலில் 360 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட உள்ளது.
 
இது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல பகுதியில் வருகிறது. ஆமை முட்டையிடும் பகுதியாகவும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அங்கு எந்த கட்டுமானங்களை எழுப்பினாலும், அது விதிமீறலாகும்.

எனவே இத்திட்டத்துக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேனா நினைவு சின்னம் அமைக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இத்திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்தினால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 
 
இந்த திட்ட அனுமதியில் இடம்பெற்றுள்ள நிபந்தனைகளின்படி, உரிய ஆய்வுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.