சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நடுத்தெருவுக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பம்
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருடக்கணக்கில் தங்கியிருப்பவர்களை காலி செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பில் ஆக்கிரமிப்பு விஷயத்தில் தயவுதாட்சண்யம் கிடையாது. உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதியை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் வந்தனர்.
அங்கு குடியிருக்கும் மக்களிடம் உடனடியாக வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் பொதுமக்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் காவல்துறையினர் உதவியுடன் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பம் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்பதாகவும், அரசு அவர்களுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.