புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 16 ஜூலை 2025 (11:04 IST)

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி அதிரடி அறிவிப்பு..!

Anbumani
ஆட்சி அதிகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பங்கு வேண்டும் என்றும், அது நமது உரிமையும் கூட என்றும், அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றி பயணத்தின் வேகத்தை நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
 
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா : வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!
 
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி  இந்த  மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும்,  மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம்  தமிழ்நாட்டில் இல்லை.  தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி.
 
தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு  தமிழ்நாட்டை ஆளும்  அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும்.  அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்.
 
Edited by Mahendran