ஆபத்தின்றி நோயாளிகளை மீட்டாச்சு... அமைச்சர் பேட்டி!
நோயாளிகளை மீட்டுவிட்டதாக சொல்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தீ விபத்து குறித்து பேட்டி.
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தற்போதைய தகவல்கள்படி தீ விபத்து ஏற்பட்டதுமே கீழ் தளத்தில் இருந்த 7 ஐசியு நோயாளிகள் உட்பட 11 பேர் உடனடியாக மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஓரளவு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உள்ளே சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் வெளியேற இயலாத சூழல் உள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
இந்நிலையில் 10 பேர் கொண்ட குழு எரிந்த கட்டிடத்தினுள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் அறிந்த உடனேயே அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டுள்ள வார்டின் உள்ளே இருந்தவர்களும் மீட்கப்பட்டுவிட்டதாக சொல்கின்றனர்.
முழுமையாக தீ கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். அனைத்து நோயாளிகளும் மீட்கப்பட்டுவிட்டதாக, அலுவலர்கள் சொல்கின்றனர் என தெரிவித்தார்.