வட்டியே வேண்டாம் ; பணத்தை கொடுத்தால் போதும் - இறங்கி வந்த அன்புச்செழியன்
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
சமீபத்தில் முன்ஜாமீன் கேட்டு அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்நிலையில், திடீரெனெ இன்று காலை அவரது வழக்கறிஞர் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்னை அன்புச்செழியனின் சகோதரர் அழகர் சமீபத்தில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அசோக்குமார் விவகாரத்தில் எல்லோரும் ஒருபக்கம் மட்டுமே பார்க்கிறார்கள். இது வேதனையாக இருக்கிறது. நாங்கள் அசோக்குமாரிடம் தவறாக பேசவில்லை. இந்த பிரச்சனை பற்றி அவர் எங்களிடமோ அல்லது சசிக்குமாரிடமோ கூறியிருக்கலாம். இதை பேசி தீர்த்திருக்க முடியும். இனிமேல் சினிமாவிற்கு பணம் கொடுப்பதையே நிறுத்தி விடுவது என முடிவெடுத்துள்ளோம். நாங்கள் கொடுத்த பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும். எங்களுக்கு வட்டி கூட வேண்டாம். இதற்கு அண்ணன் அன்புவும் ஒத்துக்கொள்வார் என தன்னிடம் கூறியதாக பார்த்திபன் தெரிவித்தார்.