திங்கள், 11 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (09:02 IST)

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

Palani temple
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக இருந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவின் நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய அதே நிறுவனம்தான் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கவும் நெய் வழங்கியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

X தளத்தில், Vinoj P Selvam (@VinojBJP), மற்றும் Selva Kumar (@Selvakumar_IN) ஆகியோர், “திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கல் A.R.Foods நிறுவனம் தான், பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகம் செய்கிறது” என்றும், “திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு இறைச்சி கொழுப்பு, பன்னி இறைச்சி கொழுப்பை கலந்து விற்ற உத்தமர் ராஜசேகர்தான் (AR Foods) பழனி முருகன் கோயிலுக்கும் நெய் சப்ளை செய்கிறார்” என்றும், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பக்தர்களை ஏமாற்றும் பொருட்டும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிடவும் திட்டமிட்டு அவதூறு செய்திகளை மேற்படி இரு நபர்களும் பரப்பியுள்ளனர்.

அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், மூன்றாவது படை வீடாகத் திகழும் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தயார் செய்யப்படும் தரமான பஞ்சாமிர்தத்தினை அருட்பிரசாதமாக பெற்றுச் செல்கின்றனர். பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்குத் தேவையான வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை, தேன், பேரீச்சம்பழம், ஏலக்காய், கற்கண்டு மற்றும் நெய் ஆகிய முதல்தரமான மூலப்பொருட்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் நெய்யினை திண்டுக்கல் ஆவின் நிறுவனத்திடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் இத்திருக்கோயிலின் பஞ்சாமிர்த தயாரிப்பு அவ்வப்போது உணவுப் பாதுகாப்பு துறையால் தரப்பரிசோதனை செய்து வரப்படுகிறது. பஞ்சாமிர்த தயாரிப்பு மூலப்பொருட்களில் எவ்வித கலப்பட பொருள்களோ, தரம் குறைந்த பொருள்களோ இருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறையால் எப்போதும் தெரிவிக்கப்பட்டதில்லை.

மேலும் மேற்படி அவதூறு செய்திகளைப் பரப்பிய நபர்கள் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆகவே பழனி திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பக்தர்கள் மத்தியில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கவும், மதக்கலவரத்தை தூண்டிவிட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிடவும் திட்டமிட்டு தீயஉள்நோக்கத்துடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவரும் அவதூறு செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பக்தர்களையும், பொதுமக்களையும் திருக்கோயில் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இதுபோன்ற அவதூறான செய்திகளை சமூக ஊடகங்களில் எவரும் வெளியிடவோ, பரப்பவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி புட் நிறுவனம் ,பழனி கோயிலுக்கும் நெய் தருவதாக தவறான தகவலை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தவறாக பரப்பியதாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், செல்வகுமார் ஆகியோர் மீது காவல்துறையில் அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது. வினோஜ் பி. செல்வம் தமிழ்நாடு பாஜக மாநில இளைஞரணித் தலைவராக உள்ளார்.


Edited by Mahendran