புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (06:43 IST)

சீன எல்லையில் மோதல்: பிரதமர், ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

லடாக் எல்லையில் இந்திய சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பிலும் சீன தரப்பிலும் உயிர்கள் பலியாகி இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி வாய் திறக்காதது ஏன் என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சீனாவின் தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்கள் எத்தனை பேர் அவர்கள் எந்தெந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விபரங்களை மத்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக ஏன் அறிவிக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஒரு நாட்டின் எல்லையில் தாக்குதல் நடந்தபோது எந்த நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதிவோ இவ்வாறு அமைதியாக இருந்தது உண்டா? என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள்? எந்தத் தகவலையும் அரசு இதுவரை அதிகார பூர்வமாகத் தெரிவிக்கவில்லை, ஏன்?
 
சீனத் துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியப் பிரதமர் இது வரை வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. இது போன்று வாய் திறக்காத பிரதமரோ ஜனாதிபதியோ உலகில் வேறு நாட்டில் யாராவது உள்ளார்களா?
 
ப.சிதம்பரத்தின் இந்த இரண்டு டுவிட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ப.சிதம்பரத்தின் இந்த டுவிட்டுக்களுக்கு கண்டனங்களும் குவிந்து வருகிறது. சீனாவின் தாக்குதலை கண்டித்து ஒரு வார்த்தை கூட பதிவு செய்யாத ப.சிதம்பரம் இந்த கேள்விகளை கேட்க தகுதியுள்ளவரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.