1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (17:34 IST)

ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு: தேர்தல் ஆணையம் சரமாரி கேள்வி!

ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு: தேர்தல் ஆணையம் சரமாரி கேள்வி!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற அந்த கட்சியின் சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தேர்தல் ஆணையத்தில் மல்லுக்கட்டி வருகிறது. இதன் இறுதிக்கட்ட விவாதத்திற்கு பின்னர் இன்றே இரட்டை இலை எந்த அணிக்கு சொந்தம் என்ற முடிவு தெரிந்துவிடும்.


 
 
தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் இரு அணியினரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை காலை முதல் எடுத்து வைத்து வருகின்றனர். இதில் தற்போது ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் சசிகலா அணியில் இருந்த போது செய்த சில தவறுகள் தற்போது ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகலில் நடந்த வாதத்தின்போது, மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் சரமாரி கேள்விகளை முன் வைத்தது.
 
சசி நியமனம் குறித்து முரண்பட்ட தகவல்களை தந்தது ஏன்? தேர்தல் ஆணையத்திலும், உயர்நீதிமன்றத்தில் முரண்பட்ட தகவலை அவர் கொடுத்துள்ளார் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
 
சசிகலா அணியில் மதுசூதனன் இருந்தபோது விதிகளுக்கு உட்பட்டே சசிகலா நியமனம் செய்யப்பட்டார், நிர்வாகிகளின் கருத்து அடிப்படையில் பொதுச்செயலளரை தேர்வு செய்யலாம் உறுப்பினர்களின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
 
ஆனால் தற்போது சசிகலாவின் நியமனம் செல்லாது என மதுசூதனன் ஓபிஎஸ் அணியில் இருந்து சொல்கிறார் என சுட்டிக்காட்டியது தேர்தல் ஆணையம். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு அப்போது அவருக்கு சட்ட நிபுணர் குழு தவறாக வழி காட்டியதாகவும். அதனை உணர்ந்து தான் தற்போது அவர் சசிகலா அணியில் இருந்து வெளியேறியதாகவும் கூறினர்.
 
மேலும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டபோது ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைத்தார். இதுவும் தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் தரப்பினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. தற்போது ஓபிஎஸ் தரப்பின் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.