1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (15:47 IST)

சசிகலா கொடுத்த 2 கோடி: பதில் சொல்ல ஓபிஎஸ் மறுப்பு!

சசிகலா கொடுத்த 2 கோடி: பதில் சொல்ல ஓபிஎஸ் மறுப்பு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தனக்கு சிறப்பு வசதிகள் வழங்க சிறை விதிகளை மீறி சிறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து கருத்து சொல்ல ஓபிஎஸ் மறுத்துள்ளார்.


 
 
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு சிறப்பு சலுகைகள் அளித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
 
இதற்காக 2 கோடி ரூபாய் வரை பணம் கை மாறியுள்ளது என சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்து அது தொடர்பான அறிக்கையை அவர் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், டிஐஜி ரூபாவின் இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயணா முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனால் அதே நேரம் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் இது குறித்தான விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா.
 
இந்நிலையில் மதுரை விமான நிலையத்துக்கு வந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவில் முதன் முதலாக சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியே வந்து தனி அணியாக செயல்படுபவருமான ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள், சசிகலாவுக்கு சிறையில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் குறித்தும் அதற்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
 
ஆனால் அதற்கு பதில் அளிக்க மறுத்துள்ளார் ஓபிஎஸ். கர்நாடகா அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. சசிகலா லஞ்சம் கொடுத்தது குறித்து விசாரணை நடந்து வருவதால் நான் இதுகுறித்து கருத்து சொல்ல இயலாது என்றார்.