திடீர் திருப்பம் ; ஒ.பி.எஸ் அணி கறார் ; இரு அணிகள் இணைவதில் சிக்கல்


Murugan| Last Modified திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:44 IST)
அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கிய பின்பே தலைமை கழகத்திற்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி திடீர் நிபந்தனை விதித்துள்ளதால் இரு அணிகளின் இணைப்பில் சிக்கல் நீடித்து வருகிறது.

 

 
6 மாத இடைவெளிக்கு பின் அதிமுகவின் எடப்பாடி அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி ஆகிய இரண்டும் இன்று இணைய இருப்பதாக நேற்று மாலையிலிருந்தே செய்திகள் வெளியானது. அதற்கான ஏற்பாடுகளும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.
 
இன்று காலை ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வருவார் எனவும், அங்கு எடப்பாடி பழனிச்சாமியும், அவரும் செய்தியாளர்களை சந்தித்து அணிகள் இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. இதனால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர்.
 
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கி உத்தரவிட்ட பின்புதான் நாங்கள் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி நிபந்தனை விதித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கு எடப்பாடி தரப்பு தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.
 
இதனால் இரு அணிகளும் இன்று இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பினரிடையே எடப்பாடி அணி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :