செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (16:12 IST)

உங்களை சும்மாவிடமாட்டோம்: துணை முதல்வர் ஓபிஎஸ் ஆவேசம்!

லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டு கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விவகாரத்தில், இதுபோன்ற செயல்களை செய்பவர்களை சும்மா விடமாட்டோம், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
 
பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
 
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
 
முடிவில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பல்கழைக் கழக துணைவேந்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து திருவான்மியூரில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அரசில் பணிபுரியும் போதோ அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களோ தங்களது பணிக்காலத்தில் தவறு செய்திருந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.