1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (15:32 IST)

இணையவழி ஆபாச தாக்குதல்.! வந்திதா பாண்டே IPS-க்கு ஆதரவாக நின்ற கனிமொழி..!!

Kanimozhi
புதுக்கோட்டை எஸ்.பி. மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தப்படுவதாக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து திட்டமிட்டு நாம் தமிழர் கட்சியினை பழிவாங்குவதாக  சீமான் புகார் கூறியிருந்தார்.  மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து  பதிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் வந்திதா பாண்டே ஐபிஎஸ்க்கு தனது ஆதரவை திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல் என தெரிவித்துள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

 
ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் திருமிகு. வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.