ஓலா கார், ஆட்டோ கட்டணம் திடீர் உயர்வு! – அதிர்ச்சியில் பயணிகள்!
சென்னையில் ஓலா ஆட்டோ, கார் வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில் மக்கள் பயணங்களுக்கு அதிகமான அளவில் வாடகை ஆட்டோ மற்றும் டாக்சிகளையே நம்பியுள்ளனர். பொதுவாக வாடகை டாக்சி மற்றும் ஆட்டோக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கட்டணம் நிர்ணயிக்கப்படாத நிலையில் அவர்கள் சொல்வதே கட்டணமாக இருந்து வருகிறது.
அதனால் மக்கள் குறைந்த விலையில் ஆட்டோ, கார்களில் பயணிக்க பெரிதும் ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் டாக்சி செயலிகளை நம்பியே உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஓலா டாக்சி ஆட்டோக்களிலும் கட்டணம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்னதாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.51 ஆக இருந்தது தற்போது ரூ.110 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வாடகை கட்டணத்துடன், பயணிகள் வசதி கட்டணம் என்றும் கி.மீ கணக்கிட்டு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுவான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.