செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட நர்ஸ்.. மருத்துவமனை நடவடிக்கை
அரசு மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஊசி போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரியும் கல்பனா என்ற பெண்மணி, நோயாளி ஒருவருக்கு செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஊசி போட்டுள்ளார்.
இதனை பார்த்த ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பரிமளா தேவி மற்றும் ஆற்காடு அரசு மருத்துவமனை டாக்டர் சிவசங்கரி உள்ளிட்ட நபர்கள்: நர்ஸ் கல்பனாவிடம் விசாரணை நடத்தினர். பின்பு இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நர்ஸாக பணிபுரிபவர்கள் அலட்சியமாக இருக்கின்றனர் என ஒரு பக்கம் பொது மக்களிடம் புகார்கள் எழுந்துவரும் நிலையில், செல்ஃபோன் பேசிக்கொண்டே தவறுதலாக வேறு மருந்தால் ஊசி போட்டு விபரீதம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? என மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது