1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (19:42 IST)

இன்னும் சம்பளம் வரவில்லை: புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்

புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அரசு ஊழியர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது 
 
ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் சம்பளம் வராததால் புலம்பி வருகின்றனர். அந்த வகையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் சம்பளம் வரவில்லை என ஆசிரிய ஆசிரியைகள் புலம்பி வருகின்றனர். ஏற்கனவே அரசு பள்ளி ஆசிரியர்களை விட பல மடங்கு குறைவாக சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து தங்களது சம்பளத்தை அரசு உறுதி செய்து தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில செயலாளர் கனகராஜ் என்பவர் கூறியதாவது: “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சுயநிதிப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவுகளிலும் எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றி பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இது வருத்தத்துக்கு உரியது.
 
ஊரடங்கால் கடுமையான சமூக, பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அந்த ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு நேரடியாகத் தலையிட்டு, ஊதியம் வழங்காத பள்ளி நிர்வாகங்களை உடனடியாக ஊதியம் வழங்க நிர்பந்திக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.