நகராமல் மையம் கொண்டுள்ள நிவர்; கரையை கடக்க தாமதமாகும் என தகவல்!
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் வேகம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை புயலாக உருவான நிவர் கரையை நோக்கி மணிக்கு 5 கி.மீ என்ற வேகத்தில் முன்னேறி வந்தது. இதனால் நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.