நிவர் புயல் எதிரொலி: தமிழக, புதுவை முதல்வர்களுடன் பிரதமர் பேச்சு
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை மாலை தமிழகம் மற்றும் புதுவை இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதலே தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. புயல் நெருங்க நெருங்க இன்னும் மழையின் வேகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அதுமட்டுமின்றி புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மரங்கள் மின் கம்பங்கள் சாய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவை முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் புயல் நிவாரணம் குறித்து பேசியுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் கேட்டதாகவும் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார் என்பதும், புதுவைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இதனை புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது