செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (10:56 IST)

நிர்மலாதேவிக்கு அரசியல் மிரட்டல்கள் வருகின்றன – வழக்கறிஞர் புகார் !

மாணவிகளைப் பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவிக்கு அரசியல் ரீதியாக மிரட்டல்கள் வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி  மாணவிகளை தவறான பாலியல் தேவைகளுக்கு வழிநடத்திய விவகாரம் தமிழகத்தில்  பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் பேராசிரியை  நிர்மலா தேவி, துணை பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி  மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக விசாரிக்கப்பட்டு  வருகின்றனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீன் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் நிர்மலா தேவி மாதம்தோறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். நீதிமன்றத்துக்கு ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வந்த நிர்மலா தேவி, தனக்கு சாமி வந்துள்ளதாகக் கூறி நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டார். அப்போது தன் மீது குற்றம்சாட்டிய மாணவிகள், தூக்கிலிட்டு இறந்து விட்டதாகக் குறிசொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து சிறையில் அவருக்கு தரப்பட்ட தொல்லைகளால் மனநலம் பாதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று நீதிமன்றத்துக்கு வழக்கத்துக்கு மாறாக மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்நிலையில் அவருக்கு அரசியல் ரீதியாக மிரட்டல்கள் வருவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்றும் சிகிச்சைக்குப் பிறகு நிர்மலா தேவி மனநலமுடன் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.